யாழ். மாவட்டத்தில் இன்னல கிழங்கு செய்கை வெற்றியளித்துள்ளது

யாழ். மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட இன்னல கிழங்கு செய்கை வெற்றியளித்துள்ளது.

திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் உருளைக்கிழங்கிற்கு ஒப்பான, நோய்த்தாக்கம் மிகவும் குறைந்த “இன்னல” என்ற கிழங்கு செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொண்டு, யாழ். மாவட்டத்தில் செய்கை பண்ணலாம் என உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இந்த கிழங்கு வகை இலங்கையில் காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தளை, கொழும்பு, குருணாகல் போன்ற இடங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது.

அதிக வருமானத்தைத் தரக்கூடிய இந்த கிழங்கு வகையில் கொழுப்பு, சர்க்கரை குறைவாக உள்ளதால் அதிகக் கேள்வி நிலவுகிறது.

இக்கிழங்கின் இலைகள் அழகாகக் காணப்படுவதால், அழகுப்பயிராகவும் பயிரிட்டு வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருக்கும் என விவசாய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னல கிழங்கில் TJ-30 ,TJ-33 ,TJ-34 ஆகிய வகைகளை யாழ். மாவட்டத்தில் வெற்றிகரமாகப் பயிரிட முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இக்கிழங்கை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு விவசாய ஆராய்ச்சி நிலையம் கிழங்கு தண்டுத் துண்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்குகின்றது.