ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

2019 மார்ச் மாதம் 2.9 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்த முதன்மை பணவீக்கமானது உணவு மற்றும் உணவல்லா பொருட்கள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் ஏப்ரல் மாதத்தில் 3.6 சதவீதமாக அதிகரித்து பதிவாகியுள்ளது.

இதேவேளை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் – 1.2 பதிவாகியுள்ள அதே வேளை உணவல்லா பொருட்களின் பணவீக்கமானது தொடர்ச்சியாக நான்காவது மாதமாக அதிகரித்தபோக்கில் பதிவாகி ஏப்ரல் மாத்தில் 7.5 சதவீத அதிகரிப்பபை பதிவு செய்துள்ளது.

அதேபோல் தேசிய நுகர்வேர் சுட்டெண் மாற்றமானது ஏப்ரல் மாதத்தில் 1.9 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மார்ச் மாதத்தில் 1.7 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாதாந்த மாற்றங்களைக் கருத்திற்கொள்ளும் போது தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது ஏப்ரல் மாதத்தில் 0.7 சதவீதத்தினால் அதிகரித்தது. இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் அவதானிக்கப்பட்ட விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தது.

உணவு வகையில் காய்கறிகள், பால்மா, உருளைக்கிழங்கு, உடன்மீன், எலுமிச்சம்பழம், பெரிய வெங்காயம் என்பனவற்றினதும் இதனைத் தொடர்ந்து உணவல்லா வகையில் வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை போக்குவரத்து பல்வகைப்பொருட்கள், பணிகள், நலம், ஆடைகள் மற்றும் காலணிகள் துணை வகைகளின் விலைகளும் மாத காலப்பகுதியில் அதிகரித்தன.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 மார்ச் மாதத்தில் 5.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2019 ஏப்ரல் மாதத்தில் 6.3 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு உணவு வகைகளிலுள்ள விடயங்களின் குறிப்பாக பால்மாவின் விலை அதிகரிப்புக்களும் உணவல்லா வகையில் குறிப்பாக, வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை மற்றும் பல்வகைப்பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகளின் விலை அதிகரிப்புக்களுமே காரணங்களாக அமைந்தன. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கமும் 2019 மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 3.3 சதவீதத்திலிருந்து 2019 ஏப்ரல் மாதத்தில் 3.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.