அசாதாரண வரி விதிப்பால் பாதிக்கப்படும் இரும்பு வர்த்தகர்கள்

உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுக்காக்கும் வகையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொள்கைத்திட்டம் காரணமாக இரும்பு வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ள சிறிய அளவிலான வர்த்தகர்கள் தமது செயற்பாடுகளை இடைநிறுத்தும் அளவுக்கு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி இவர்களில் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என இரும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ். டீ.எஸ் அருளாநன்தன் தெரிவிக்கின்றார்.

தனது சங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து அவர் வழங்கி செவ்வி வருமாறு,

வெளிநாட்டு முலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொண்டு தமது நிரமானப்பணிகளை முன்னெடுக்கும்போது குறித்த முதலீட்டாளர்கள் தமது நாடுகளில் இருந்தே நிர்மானப்பனிகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் ஊழியர்களை கொண்டு வருகின்றனர். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கோ அல்லது வர்த்தகர்களுக்கோ எவ்வித நன்மையும் பயப்பதில்லை அதே போல் எமது நாட்டவர்களுக்கு தொழில் வாய்;ப்பு கிடைப்பதும் அறிதாகவே உள்ளது.

மேலும் அவர்கள் உள்நாட்டில் தமது மூலப்பொருட்களை கொள்வனவு செய்யும் போது சர்வதேச சந்தை விலைக்கே பாரிய உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்கின்றனர் இதனால் சிறிய அளவில் வியாபாரத்தை நடாத்துபவர்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை.

சிறிய சனத்தொகையை கொண்ட எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறிய வர்த்தக துறையிலேயே தங்கியுள்ளனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து பல்தேசிய நிறுவனங்கள் பல இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இவ்வாறான பின்னணியில் உள்நாட்டு சிறு முயற்சியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் உற்பத்திக்கு சரியான சந்தை வாய்பை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு நிலைத்தான் இலங்கையின் இரும்பு வர்த்தகர்களும் எதிர்நோக்கி வருகின்றனர். இன்று இலங்கையில் உள்நாட்டு வெளிநாட்டவர்களால் பாரிய இரும்புசார் மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பல தசாப்த காலங்களாக இரும்பு வர்த்தகத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள சிறிய அளவான இரும்பு வர்த்தகர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் அநேகமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களையே இறக்குமதி செய்கின்றனர்.

இந்நிலையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுக்காக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு உற்பத்திப்பொருட்களுக்கு அரசாங்கத்தினால் செஸ் வரி விதிக்கப்படுகின்றது. இது சாதாரண நுகர்வோரையே பாதிக்கின்றது. காரணம் வரி விதிப்பானது இறுதியில் நுகர்வோரையே சென்றடைகின்றது. தற்போது இறக்குமதி செய்யப்படும் இரும்பு உற்பத்திகளுக்கு 30 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்புப்பொருட்ளை இறக்குமதி செய்யும் போது வரி வதிப்பது சாதாரணமானதாகும் எனினும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பதானது அசாதாரணமான ஒன்றாகவே கருதுகின்றோம்.

அவ்வாறு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை வருடா வருடம் குறைத்தால் நியாயமானது ஆனால் இலங்கையில் இது அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இவ்வாறு அதிக வரி விதிப்பால் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல். தமது வர்த்தக நடவடிக்கைகயை முன்கொண்டு செல்ல முடியாமல் தற்போது இத்துறையில் இருந்து சுமார் 1000 க்கும் அதிகமானவர் விலகியுள்ளனர்.

அரசாங்கம் இந்த வரி விதிப்பு குறித்து மேலும் உன்னிப்பாக செயற்பட வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் யாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் யாவை என்பது குறித்து நன்கு ஆய்வு செய்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பொருட்களுக்கு வரி விதிப்பதை நிறுத்தி உள்நாட்டு பாவனையாளர்களுக்கு அதன் பயனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அதே போல் இலங்கையில் இருந்து இரும்பு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான வழியை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது இத்துறை சார் வர்த்தகர்கள் ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுப்பட்டு தமது வர்த்தகத்தை தக்க வைத்துக்கொள்வர்.

இவ்வாறு உள்நாட்டு உற்பத்தியாளர்களை மாத்திரம் கருதி இரும்பு இறக்குமதி வர்த்தகர்கள் மீது தொடர்ந்தும் வரி விதிப்பு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமாயின் அவர்களால் தொடர்ந்து இத்துறையில் நிலைத்திருக்க முடியாமால் போய்விடும்.

முன்னர் இலங்கையில் அனைத்து பாகங்களில் இருந்தும் இரும்பு கொள்வனவுக்காக கொழும்புக்கு வந்த வர்த்தகர்கள் இன்று தாம் இருக்கும் இடத்திலேயே உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். மேலும் வரி விதிப்பு காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வழங்கும் விலைக்கும் எம்மால் பொருட்களை வழங்க முடியுதுள்ளது ஆகவே அனேகமான வியாபாரிகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களையே நாடுகின்றனர். இந்நிலையில் நாம் குறித்த வியாபாரிகளுக்கு கடன் அடிப்படைலோ அல்லது வேறு சலுகைகளை வழங்கியே எமது பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. மேலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பொருத்தவரை அவர்கள் கேள்விக்கு அதிகமான பொருட்களை உற்பத்தி செய்வதால் அவற்றுக்கான விலைகள் சந்தையில் குறைவடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக எமக்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாத நிலை காணப்படுகின்றது.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் குறித்து மாத்திரம் கரிசனைக்கொள்ளும் அரசாங்கம் இதில் ஈடுப்பட்டுள்ள வர்த்தகர்கள் குறித்து கண்டுக்கொள்வதில்லை. இத்துறை குறித்து அரசாங்கத்திடம் ஒரு நடுநிலையான கொள்கை இல்லை என்றே நாம் கருதுகின்றோம்.அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் இது பொருத்தமற்றது. இது அபிவிருத்தி அடைந்த நாட்டுக்கே பொருந்தும்.

எனவே அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் போது அத்துறையில் சார்ந்துள்ள ஏனையவர்கள் குறித்தும் கரிசனை செலுத்த வேண்டும். அவர்களும் இந்நாட்டு தொழில் முயற்சியார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களும் இத்துறையில் நிலைத்திருக்கும் வகையிலான கொள்கைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.